மாற்றுத்திறனாளி சிறுவன் மூச்சு திணறி சாவு
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி சிறுவன் மூச்சு திணறி இறந்தான்.
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் ஜோசப் (வயது 3). பாலசுப்பிரமணியம் ஏற்கனவே இறந்துவிட்டார். ஜோசப் பிறக்கும் போதே மூளை முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக பிறந்து உள்ளான். இதனால் ஜோசப்பை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று ஜோசப்பிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஜோசப்பை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் காப்பக நிர்வாகிகள் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோசப் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுசம்பந்தமாக தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவன் ஜோசப் மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாகவே இறந்தது தெரியவந்தது.