மனு கொடுத்த 5 நிமிடத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலி


மனு கொடுத்த 5 நிமிடத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலி
x
தினத்தந்தி 14 Feb 2023 12:45 AM IST (Updated: 14 Feb 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

மனுகொடுத்த 5 நிமிடத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலியை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

திருவாரூர்

மனுகொடுத்த 5 நிமிடத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலியை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

கலெக்டரிடம் மனு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா கருவாக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி குணவதி. தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு 13 வயதில் ஆண் மற்றும் பெண் என 2 குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்து விட்டார். குணவதியின் மகன் மாற்றுத்திறனாளி ஆவார். தனது மகன் மாற்றுத்திறனாளியாக உள்ளதால் குணவதி, வேலைக்கு செல்லாமல் தனது மகனை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம், குணவதி ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 'எனது மகன் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. இதனால் அவன் தனது பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போய் விட்டது. எனவே அவனுக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்' என கூறி இருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாருஸ்ரீ, குணவதிக்கு ஆறுதல் கூறியதோடு, அவருடைய மகனுக்கு சக்கர நாற்காலியை உடனடியாக வழங்கினார். மனு அளித்த அடுத்த 5 நிமிடங்களில் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலியை வழங்கியது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சக்கர நாற்காலி வழங்கியதற்காக கலெக்டருக்கு, குணவதி கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.

5 நிமிடத்தில் உதவி

இதுகுறித்து குணவதி கூறுகையில், 'நான் எனது மகனுக்கு 4 வயது முதல் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகிறேன். மேலும் எனது மகன் இயற்கை உபாதை செல்வதற்கு கூட நான் தான் உதவ வேண்டி உள்ளது. எனவே எனக்கு உதவும்படி ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மனு அளித்திருந்தேன்.

தற்போது கலெக்டரிடம் இன்று (நேற்று) மனு கொடுத்தேன். மனுவை பெற்றுக்கொண்டு உடனே விசாரித்த கலெக்டர், 5 நிமிடத்தில் எனது மகனுக்கு சக்கர நாற்காலியை வழங்கினார். பாதுகாவலர் படிவம் கேட்டுள்ளேன் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து பெற்றுத்தருவதாக கூறினார்' என்றார்.


Next Story