ஊர்வலத்துக்கு தடை விதித்ததால்போலீசாருடன் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதம்
நாகர்கோவிலில் ஊர்வலத்துக்கு தடை விதித்ததால் மாற்றுத்திறனாளிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஊர்வலத்துக்கு தடை விதித்ததால் மாற்றுத்திறனாளிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊர்வலத்துக்கு தடை
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட மாநாடு நாகர்கோவில் டென்னிசன் சாலையில் உள்ள மாநில அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது.
இதையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இருந்து அரசு ஊழியர் சங்க கட்டிடம் வரை மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம் செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக அங்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் திரண்டனர். ஆனால் ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் தடையை மீறி மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட முயன்றனர்.
மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதம்
உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருடன் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கோரிக்கை அட்டைகள் மற்றும் கொடிகளை ஏந்தி செல்லாமல் தனித்தனியாக மாநாடு நடக்கும் இடத்துக்கு சென்றனர்.
பின்னர் அங்கு மாநாடு நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ஆல்பர்ட்ராஜ், ராமச்சந்திரன், தங்க குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் நம்பு ராஜன் மற்றும் மாவட்ட செயலாளர் மனோகர ஜஸ்டஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முற்றுகை போராட்டம்
மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கலெக்டர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். ஆதார் அட்டைகளை பெற முடியாத அல்லது பயன்படுத்த முடியாத மாற்றுத்திறனாளிகள் மாற்று வழிகளில் மாதாந்திர உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்ய வேண்டும். கடும் ஊனம் காரணமாக படுக்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாக சென்றடைய மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலக வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஊர்வலத்துக்கு போலீசார் தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வருகிற 30-ந்தேதி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக மாநில பொதுச் செயலாளர் நம்பு ராஜன் தெரிவித்தார். அதற்காகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் மாவட்ட துணை தலைவர் அருள், இணை செயலாளர் முருகேசன், வரவேற்புக்குழு பொருளாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.