பாட்டிலால் குத்தி மாற்றுத்திறனாளி கொலை
உத்தமபாளையம் அருகே மாற்றுத்திறனாளியை பாட்டிலால் மர்ம நபர்கள் குத்திக்கொலை செய்தனர்.
மாற்றுத்திறனாளி
உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி பழைய சினிமா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் சிங்கம் (வயது 47). மாற்றுத்திறனாளி. இவர் கோவை மாவட்டம் பல்லடத்தில் பத்திர எழுத்தராக வேலை செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விட்டார். சிங்கத்துக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் வீட்டில் இருந்து தனது 3 சக்கர சைக்கிளில் சிங்கம் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
மதுபாட்டிலால் குத்திக்கொலை
இதற்கிடையே அவர், ஆனைமலையன்பட்டி-சின்ன ஓவுலாபுரம் செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகே மது பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள், ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கொலை செய்யப்பட்ட இடத்தில் மதுபான பாட்டில்கள் கிடந்தன. சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் தேனியில் இருந்து மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
மோப்பம் பிடித்த நாய், ஆனைமலையன்பட்டி வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் சிங்கத்தின் செல்போனை போலீசார் கைப்பற்றி, அதில் நேற்று முன்தினம் இரவு பேசியவர்களின் எண்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு சிங்கத்ைத கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.