போலீசாருக்கான பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி
வேலூர் கோட்டை அகழியில் போலீசாருக்கான பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடல்சாரா மாவட்டங்களில் பேரிடர் கால மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி நடத்த தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி. பாலநாகதேவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசாருக்கு 3 நாட்கள் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் 60 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. முதல்நாளில் பேரிடர் காலங்களில் வெள்ளம் போன்ற விபத்துகளில் சிக்கியவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
2-வது நாளாக வேலூர் கோட்டை அகழியில் பாதுகாப்பு ஒத்திகை செயல் விளக்கமாக அளிக்கப்பட்டது. தமிழ்நாடு காமாண்டோ பிரிவை சேர்ந்த ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர் இந்த செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், ரப்பர் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.
இறுதி நாள் பயிற்சியாக இன்று (சனிக்கிழமை) போலீசாரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.