5 இடங்களில் பேரிடர் ஒத்திகை
குமரியில் 5 இடங்களில் பேரிடர் ஒத்திகை நாளை நடக்கிறது
நாகா்கோவில்,
தமிழகம் முழுவதும் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள பேரிடர் மாதிரி ஒத்திகை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் இந்த கூட்டமானது நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதள மினி காணொலி காட்சி அரங்கில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநிலம் முழுவதும் பேரிடர் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை 1-ந் தேதி நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி குமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் பெரும் வெள்ளத்தடுப்பு குறித்த ஒத்திகை நடைபெறவுள்ளது.
அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் சுசீந்திரம் பழையாறு சோழன் திட்டை தடுப்பணையிலும், தோவாளை தாலுகாவில் திருப்பதிசாரத்திலும், கல்குளம் தாலுகாவில் வள்ளியாறு பாலத்திலும், விளவங்கோடு தாலுகாவில் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பகுதியிலும், கிள்ளியூர் தாலுகாவில் பள்ளிக்கல் முஞ்சிறையிலும் இந்த ஒத்திகை நடக்கிறது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் அந்தந்த தாலுகா மக்கள் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்து கொள்வது குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை
தொலைப்பேசி எண் 1077, 04652-231077-ல் தொடர்பு கொண்டு பொதுமக்கள் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
------
படம் உண்டு
--