எல்லை மீறி பேசும் கவர்னர் ஆர்.என்.ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
எல்லை மீறி பேசும் கவர்னர் ஆர்.என்.ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குழந்தைகள் திருமணத்தை தடுக்க 1986-ல் சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது சிதம்பரத்தில் தீட்சிகர் ஒருவர் குழந்தை திருமணம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. தானும் குழந்தை திருமணம் செய்து கொண்டதாக பகிரங்கமாக பேசியுள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி எல்லை தாண்டி பேசி வருகிறார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜனதாவின் அஜெண்டாவை உருவாக்குபவராக கவர்னர் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ். எஸ்.அமைப்பின் பிரகடனமாக செயல்படுகிறார். பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பா.ஜனதா விமர்சித்து வருகிறது. இதன் மூலமாக அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள நடுக்கம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும்போது மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரை விசாரிக்க வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூறவில்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளார். அவரை விசாரிக்க சில விதிமுறைகள் உள்ளது. அதை மீறி அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. சம்மன் அனுப்பி அவரை விசாரித்து இருக்கலாம். அமலாக்கத் துறை மூலமாக எதிர்க்கட்சியினரை பா.ஜனதா மிரட்டி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.