விளையாட்டில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும்போதுதான் ஒழுக்கமும், தலைமை பண்பும் கிடைக்கும்


விளையாட்டில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும்போதுதான் ஒழுக்கமும், தலைமை பண்பும் கிடைக்கும்
x

விளையாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும்போதுதான் ஒழுக்கமும், தலைமை பண்பும் கிடைக்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

திருவண்ணாமலை

விளையாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும்போதுதான் ஒழுக்கமும், தலைமை பண்பும் கிடைக்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

மாநில அளவிலான தடகள போட்டி

பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 63-வது குடியரசு தின தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது.

இந்த போட்டிகள் வருகிற 30-ந் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது. தொடக்க விழாவிற்கு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் முருகேஷ் வரவேற்றார்.

தடகள விளையாட்டு போட்டியை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு தடகள விளையாட்டு ஜோதி ஏற்றி வைத்தனர். முன்னதாக மாணவர்களின் மல்லர்கம்பம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

ஒலிம்பிக்கில் தங்கவேட்டை

தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு தனி கவனம் செலுத்தும் முதல்-அமைச்சரை பெற்றுள்ளோம். உலகளவில் பின்லாந்து, டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளில் 3-ல் 2 பங்கு மக்கள், தங்களை ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுத்தி கொள்கின்றனர்.

இந்தியாவில் 14 மாநிலத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பேரிடம் பி.பி.சி. நடத்திய ஆய்வில் உட்கட்டமைப்பு கிடைக்கவில்லை, விளையாட்டு துறைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, பாராட்டு கிடைக்கவில்லை என வருத்தமாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இப்படிப்பட்ட ஒரு நிலை இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் செயல்படுகிறார். ஒலிம்பிக்கில் தங்கவேட்டை என்ற திட்டத்தின் மூலமாக தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளி வென்றால் ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசு என அறிவித்துள்ளார். இந்த திட்டத்துக்காக ரூ.25 கோடி நிதியை ஒதுக்கி உள்ளார்.

14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை குடியரசு தின விளையாட்டு மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் மூலமாக உருவாக்கி வருகிறோம்.

வருவாய் மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவில் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. திருவண்ணாமலையில் மாநில அளவிலான தடகள போட்டி நடத்தப்படுகிறது. விளையாட்டை சாதாரணமாக பார்க்கக் கூடாது. விளையாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும்போதுதான் நமக்கு ஒழுக்கமும், தலைமை பண்பும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டி மனப்பான்மை

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

பாரதியார் காலத்திலேயே விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. காலப்போக்கில் பள்ளிகளில் விளையாட்டு மங்கி போய்விட்டன. பொறியாளர், மருத்துவராக வர வேண்டும் என கூறி படிக்க செய்து கட்டாயப்படுத்துகின்றனர்.

பள்ளி பருவத்திலேயே மாணவர்களின் மனதில் போட்டி மனப்பான்மையை உருவாக்கினால் தான் சிறந்த வல்லுனராக வர முடியும். அதனால் தான் திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அரசாங்கம் அறிவிக்கின்ற திட்டங்கள் அதன் இலக்கை அடைய வேண்டும் என்றால் அரசு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். பள்ளிகல்வித்துறைக்கு அப்படிப்பட்ட அதிகாரிகள் கிடைத்து உள்ளதால் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

உலகளவில் தமிழகத்தை முதல்- அமைச்சர் ஒப்பிட்டு பார்த்து வருகிறார். அதன் விளைவுதான் மாமல்லபுரத்தில் உலக அளவிலான செஸ் போட்டியை நடத்தி உள்ளார். உலகத்தோடு ஒப்பிட்டு பார்த்து தமிழகம் முன்னேற வேண்டும் என நினைக்கிறார்.

ஊக்குவிக்கும் திட்டங்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களையும் பயிற்சியாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்து அந்தத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் 14, 16, 17, 19 என்ற வயது அடிப்படையில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்துள்ளனர்.

இதில் ஓட்ட பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் 3 நாட்கள் வீராங்கனைகளுக்கும், அடுத்த 3 நாட்கள் வீரர்களுக்கும் நடைபெற உள்ளது.


Next Story