"மாணவர்களின் முன்னேற்றத்துக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம்" - சபாநாயகர் அப்பாவு


மாணவர்களின் முன்னேற்றத்துக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம் - சபாநாயகர் அப்பாவு
x

“மாணவர்களின் முன்னேற்றத்துக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம்” என்று நெல்லை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எம்.ஜின்னா ஷேக்முகம்மது வரவேற்றார். நெல்லை அண்ணா பல்கலைக்கழக மண்டல துணை இயக்குனர் சைலேஷ் சற்குணம், இஸ்ரோ மகேந்திரகிரி துணை இயக்குனர் ஜெபசிகாமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சபாநாயகர் அப்பாவு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "இன்று பட்டம் பெறும் பட்டதாரிகள் இனிமேல் உங்கள் உறுதிப்பாட்டை நோக்கி செல்ல வேண்டும். ஒரே மாதிரியான கலாசாரத்தில் இருந்து பன்முக கலாசாரத்திற்கு மாறுவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். தகவல் தொடர்பு விளக்கக்காட்சி மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் போன்ற மென்மையான திறன்களை பணிச்சூழலுக்கு ஏற்றவாறு வளர்த்துக் கொள்ள வேண்டும். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே நம்முடைய இலக்கை அடைய முடியும். அதன் அடிப்படையில் பல நபர்களுக்கும், சமுதாயத்திற்கும் சேவை செய்ய முடியும். முதலில் மாணவர்கள் நம்முடைய தொழில்நுட்ப திறமையை பலப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். மாணவர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானது ஒழுக்கம். சுய ஒழுக்கம் சார்ந்த கல்வி தான் பயன் தரும்" என்றார். விழாவில் கல்லூரி துறைத்தலைவர்கள் பிச்சம்மாள், சுப்புலட்சுமி, அனுலா பியூட்டி, அக்பர் உசேன், பிரின்ஸ், பர்வதவர்த்தினி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராதாபுரம் நி.வெ.செ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு செயலிகளுடன் கூடிய செல்போன், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், நடைப்பயிற்சி உபகரணங்கள், மடக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 573 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் தொழிற்கடன் வழங்கப்பட்டது. மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டை வழங்க பரிந்துரைத்தனர். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவில் மகளிர் திட்ட உதவி இயக்குனர் சுமதி, திட்ட அலுவலர் சாந்தி, உதவி திட்ட அலுவலர்கள் அன்னசெல்வம், மல்லிகா, ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிச்சையா, பிளாரன்ஸ் விமலா, வட்டார இயக்க மேலாளர் செந்தூர் ஜெயந்தி, பஞ்சாயத்து தலைவர்கள் பொன் மீனாட்சி (ராதாபுரம்), ராதிகா (நவ்வலடி) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story