குந்தா அணையில் நிறம் மாறிய தண்ணீர்
தொடர் மழையால் குந்தா அணையில் தண்ணீர் நிறம் மாறியது. மேலும் குழாய்களில் சேறு அடைப்பதால், 20 சதவீத மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
தொடர் மழையால் குந்தா அணையில் தண்ணீர் நிறம் மாறியது. மேலும் குழாய்களில் சேறு அடைப்பதால், 20 சதவீத மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
மின் உற்பத்தி
நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவாணி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பைக்காரா, கிளன்மார்கன், மரவக்கண்டி போன்ற அணைகளின் மூலம் நீர் மின் நிலையங்களில் இருந்து தினமும் மின் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதில் குந்தா, பைக்காரா ஆகிய 2 மின் வட்டங்களில் 12 மின் நிலையங்கள், 13 பெரிய மற்றும் சிறிய அணைகள், 30 தடுப்பணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 833.65 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, குந்தா அணையில் சேமிக்கப்படும் தண்ணீர் மூலம் கெத்தையில் 175 மெகாவாட், பரளியில் 180 மெகா வாட், பில்லூரில் 100 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
அடைப்பு
இந்த நிலையில் குந்தா அணையில் உள்ள சுரங்கப்பாதை குழாய்களில் சேறு, சகதி மற்றும் கழிவுகள் தேங்கி அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கெத்தை நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் நீர்மின் நிலையத்தில் உள்ள எந்திரங்களும் மற்றும் அதன் உதிரி பாகங்கள் பழுதாகி வருகின்றன.
ஊட்டி சுற்றுவட்டாரத்தில் பெய்யும் மழை மூலம் மணலாடா, பிக்குலி பாலம், தங்காடு தோட்டம் நீரோடை வழியாக கெத்தை அணைக்கு தண்ணீர் வருகிறது. தற்போது குந்தா அணையின் மொத்த கொள்ளளவான 89 அடி, கெத்தை அணையின் மொத்த கொள்ளளவான 154 அடியில் கிட்டத்திட்ட 50 சதவீதத்திற்கும் மேல்(அதாவது பாதி அளவுக்கு) சேறும், சகதியும் சேர்ந்திருக்கிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் நிறம் மாறி காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மின் உற்பத்தி முறையாக நடைபெறவில்லை.
20 சதவீதம் பாதிப்பு
இதுகுறித்து குந்தா மின் உற்பத்தி வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தில் ராஜன் கூறியதாவது:-
தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் இருந்து அடித்து வரப்பட்ட சேறும், சகதியும் அணையில் வந்து தேங்குகிறது. இதனால் கெத்தை உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் கருவிகளில் லேசான பாதிப்பு ஏற்படுவதால், மின் உற்பத்தியில் சிக்கல் இருக்கிறது. இதன் மூலம் வழக்கமான மின் உற்பத்தியில் 20 சதவீதம் குறைந்துள்ளது.
மழை குறைந்தவுடன் குழாய்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். பில்லூர் அணையில் அதிக அளவில் சகதி உள்ளது. அதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இவ்வாறு அவர் கூறினார்.