120 வீடுகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு: கடலூர் மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை பொதுமக்களுக்கு ஆணையாளர் எச்சரிக்கை
கடலூர் மாநகராட்சியில் கட்டணம் செலுத்தாததால் 120 வீடுகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு ஆணையாளர் நவேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாநகராட்சியில் 2022-23-ம் நிதியாண்டிற்கான வரி வசூல், சொத்து வரி பொது சீராய்வு பணிகள் முடிவு பெற்று கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தான் தொடங்கியது. இதில் முதல் அரையாண்டு கணக்கின்படி கடலூர் மாநகராட்சியில் வரி வசூல் மிக குறைந்த அளவு மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. அதனால் கடலூர் மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவை என மொத்தம் ரூ.78 கோடி பாக்கி உள்ளது.
குடிநீர் இணைப்பு துண்டிப்பு
இந்த தொகை வசூல் ஆகாத காரணத்தால் மத்திய அரசிடம் இருந்து உரிய மானியம் பெறுவதிலும், அரசு சார்பு நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் மாநகராட்சியால் செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள், ஊதியம் மற்றும் இதர பண பயன்கள் ஏதும் வழங்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை நிலுவையின்றி செலுத்த வேண்டும்.
இதற்காக வருவாய்துறை, சுகாதாரம், பொறியியல் நகரமைப்பு, கணக்கு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களையும் இணைத்து குழுவாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வார்டுகள் தோறும் வீடு வீடாக சென்று நேரடியாக வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குடிநீர் கட்டணம் செலுத்தாத 57 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பாதாள சாக்கடை கட்டணம் செலுத்தாத 63 இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 49 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
அதனால் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை கடலூர் மாநகராட்சி அலுவலகம், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் துறைமுகம் ஆகிய மாநகராட்சி கணினி வசூல் மையங்களிலும் அல்லது https://tnurbanepay.tn.gov.in/என்ற இணையதள முகவரி மூலமாகவும் செலுத்தி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்கலாம்.
மேற்கண்ட தகவல் நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தெரிவித்துள்ளார்.