14-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் கால கற்கோவில் கண்டெடுப்பு
தென்னத்திரையான்பட்டியில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் கால கற்கோவில் கண்டெடுக்கப்பட்டது.
ஆவூர்:
கற்கோவில் கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே, விராலிமலை ஒன்றியம், தென்னத்திரையான்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ரெகுநாதபுரத்தில், அடர்ந்த வனப்பகுதிக்குள், கி.பி. 14-ம் நூற்றாண்டை சேர்ந்த, பிற்கால பாண்டியர்களின் கற்றளி, இடிந்த நிலையில் உள்ள கற்கோவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், பிற்கால பாண்டியர்களின் கலைநயமிக்க சிற்பங்கள் கேட்பாரற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கிறது. பேராசிரியர் முத்தழகன் தலைமையில், கீரனூர் முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில், இந்த பிற்கால பாண்டியர்களின் இடிந்த நிலை கற்றளி அடையாளம் காணப்பட்டுள்ளது.
கலைநயமிக்க சிற்பங்கள், வேலைப்பாடு மிக்க தூண்கள், கல்வெட்டுகளுடன் கூடிய கற்கள் அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர், அரசு அதிகாரிகள் எனக் கூறி, பல சிற்பங்களை இந்த கிராமத்தில் இருந்து எடுத்துச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அந்த சிற்பங்கள் தற்போது எங்கு உள்ளது என்று தெரியவில்லை என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கலைநயமிக்க சிற்பங்கள் பாதுகாக்க வேண்டும்
சில மாதங்களுக்கு முன்னர், இந்தப் பகுதியை சுற்றியே, ஆசிரியம் கல்வெட்டுகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள், இரும்பு உருக்கு உலைகள், பல்லவர் கால அய்யனார் சிற்பம் என தொடர்ந்து செய்திகள் வந்தாலும், அவை யாவும் இதுவரை தொல்லியல் துறை பாதுகாப்பில் வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ள இந்த பிற்கால பாண்டியர்களின் கற்றளியையாவது, தொல்லியல் துறை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், கிரானைட் கற்களால் ஆன வேலைப்பாடு மிக்க எச்சங்கள் பாதுகாக்கப்படும். மேலும், கலைநயமிக்க சிற்பங்களை, தொல்லியல்துறை உடனடியாக அப்பகுதியில் இருந்து எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்களின் கருத்தாகும்.