டி.கல்லுப்பட்டி அருகே 16-ம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டெடுப்பு


டி.கல்லுப்பட்டி அருகே 16-ம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டெடுப்பு
x

டி.கல்லுப்பட்டி அருகே 16-ம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

மதுரை

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி அருகே 16-ம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

நடுகல் சிற்பம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே மோதகம் பகுதியில் பூசாரி முத்துசாமி என்பவர் பழமையான சிற்பம் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில், பேராசிரியர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர் அனந்தகுமரன், தமிழ் செல்வம் ஆகியோர் கரையாம்பட்டி பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். கி.பி. 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.. இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:-

ஆண், பெண் உருவம்

போரில் வீர மரணமடைந்த வீரனுக்கு நினைவாக நடுகல் நடப்பட்டு காவல் தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். திருமங்கலம்-ராஜபாளையம் பிரதான சாலையில், கரையாம்பட்டி விலக்கு வடக்கு திசையில் முட்புதரில் எழுத்துகள் கொண்ட நடுகல் கண்டறியப்பட்டது. இதில் வாணன் என்ற வரியை தவிர மற்ற எழுத்துக்கள் முற்றிலும் தேய்மானத்தோடு காணப்பட்டதால் பொருள் அறிய முடியவில்லை.

ஆண் மற்றும் பெண் உருவத்துடன் காணப்படும் இந்த நடுகல் 4 அடி உயரம், 2 அடி அகலம் கொண்டது. நடுகல்லில் ஒரு ஆண், பெண் சிற்பம் வலது காலை மடித்து இடது காலை நீட்டி அமர்ந்த கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

16-ம் நூற்றாண்டு

இருவரும் விசிறி வடிவில் ஐந்து மடிப்பு தொங்கும் விரிப்பின் மீது அமர்ந்துள்ளனர். ஆண் காலில் அணிந்திருக்கும் கழல் அவனது வீரத்தை பறைசாற்றுகிறது. அவனது கையில் பிடித்துள்ள வாள் தரையை உரசிய வண்ணம் உள்ளது. இடுப்பிலிருந்து கழல் வரை இறுக்கமான ஆடை, இடுப்பில் கச்சையும் அணிந்துள்ளான். வயிற்றில் மடிப்பு, விரிந்த மார்பு, கழுத்தில் பதக்கம், காதில் காதணி உள்ளது. தலையில் சற்று சரிந்த நிலையில் கொண்டை அவிழ்ந்து விடாமல் இறுக்கிக் கட்டி முடிந்துள்ளது.

பெண் சிற்பம் ஆணின் வலது பக்கம் அமர்ந்து தன்னுடைய தலைக்கு இணையாக இடது பக்கத்தில் பெரிய கொண்டை அலங்காரத்தோடு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இடுப்பில் பெரிய கச்சாடையும், பாதம் வரை ஆடையும் அணிந்துள்ளார். இச்சிற்பம் வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்க புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் எழுத்து வடிவம் மற்றும் உருவ அமைப்பை பொறுத்தமட்டில் கி.பி. 16-ம் நூற்றாண்டு சேர்ந்ததாக இருக்கலாம் என்றார்.


Next Story