பண்ருட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால சுடுமண் பொம்மைகள் கண்டெடுப்பு


பண்ருட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால சுடுமண் பொம்மைகள் கண்டெடுப்பு
x

பண்ருட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டது.

கடலூர்

புதுப்பேட்டை,

பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆறு பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், உளுந்தாம்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் கருப்பு, சிவப்பு நிறமுள்ள கீறல் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் நடத்தப்பட்ட ஆய்வில் சுடுமண் உருவ பொம்மைகள் தலையில் கிரீடம் கோட்டுருவமாக தலை பகுதி மட்டும் கிடைத்துள்ளது. மூக்கு, வாய் பகுதி சிதைந்த நிலையில் 2 கண்களும் அழகாக பொறிக்கப்பட்டுள்ளது. இச்சுடுமண் பொம்மை சங்க காலத்தை சேர்ந்த ஒரு ஆண் சிற்பத்தின் தலையாகும். சங்ககாலத்தில் மனிதன் தனது எண்ணங்களை ஓவியங்களாக வரையத் தொடங்கிய பின்னர் வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து தகுந்த வெப்பத்தில் சுடும் தொழில்நுட்பத்தை அறிந்து அழகிய சுடு மண் பொம்மைகளை உருவாக்கினான். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அரிக்கன்மேடு, கீழடி கொடுமணல், காவிரிப்பூம்பட்டினம், காஞ்சீபுரம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த சுடுமண் உருவ பொம்மைகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்று பகுதியில் ஏற்கனவே மனித உருவம் மற்றும் மிருக உருவம் போன்ற 2 சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளது. எனவே இப்பகுதி சங்ககால மக்களின் வாழ்விடமாக இருந்திருக்கிறது என்று நமக்கு கிடைத்துள்ள சான்றுகள் மூலம் அறிய முடிகிறது என்றார்.


Next Story