கண்டமங்கலம் அருகே ஒரே இடத்தில் 20 சங்ககால உறைகிணறுகள் கண்டுபிடிப்பு


கண்டமங்கலம் அருகே ஒரே இடத்தில் 20 சங்ககால உறைகிணறுகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கண்டமங்கலம் அருகே ஒரே இடத்தில் 20 சங்ககால உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாதானூர் கிராமத்தில் உள்ள அத்திக்குளத்தை நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இங்கு மண்ணுக்குள் புதைந்த நிலையில் உறைகிணறு போன்ற அமைப்பு காணப்படுவதாக வாதானூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் வரலாற்று ஆய்வாளருக்கு தகவல் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் நேற்று வாதானூர் அத்திக்குளம் பகுதியில் களஆய்வில் ஈடுபட்டார். அப்போது மண்ணின் மேற்பரப்பில் 20-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் இருப்பதை கண்டறிந்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

ஆறு, குளம் போன்ற பகுதிகளில் நீரை தேக்கி வைக்கவும் தேக்கி வைத்த நீரை தெளியவைத்து அருந்தவும் உறைகிணறு எனும் அமைப்பு சங்ககாலத்தில் ஏற்படுத்தப்பட்டது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்தகைய உறைகிணறுகள் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெளிப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்திலும் தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட இடங்களில் கடந்த காலங்களில் இவை கண்டறியப்பட்டுள்ளன.

வாதானூர் அத்திக்குளம் சீரமைக்கும் பணியின்போது, மண்ணில் புதைந்த நிலையில் உறைகிணறுகள் இருப்பது தெரியவந்தது. தற்போது மண் அகற்றப்பட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் காணப்படுகின்றன. இவை சுமார் 8 செ.மீ. சுற்றளவும் (விட்டம்), 10 செ.மீ. அகலமும் கொண்டதாக மண்ணில் புதைந்துள்ளன. இப்பகுதியில் இன்னமும்கூட ஏராளமான உறைகிணறுகள் புதைந்திருக்கலாம். அவை சிதைந்து விடாதபடி பணிகளை மேற்கொள்ளுமாறு நூறு நாள் பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒரே இடத்தில் ஏராளமான இத்தனை உறைகிணறுகள் காணப்படுவது ஆச்சரியத்துக்கு உரியதாகும். 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த உறைகிணறுகளை உரிய முறையில் பாதுகாக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story