சென்னானூர் மலையடிவாரத்தில் 2,000 ஆண்டு பழங்கால செங்கற்கள் கண்டுபிடிப்பு


சென்னானூர் மலையடிவாரத்தில் 2,000 ஆண்டு பழங்கால செங்கற்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2023 1:15 AM IST (Updated: 19 Aug 2023 9:58 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

சென்னானூர் மலையடிவாரத்தில் 2,000 ஆண்டு பழங்கால செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கள ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஊத்தங்கரை அருகே சென்னானூர் கிராமம் பாம்பாற்றின் கரையில் அமைந்துள்ளது. அங்குள்ள மலையடிவாரத்தில் ஒரு சிறு குன்றின் அடிப்பகுதியில் ஆய்வு செய்தபோது 2,000 ஆண்டு பழங்கால செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

சென்னானூர் மலையடிவாரத்தை ஒட்டி, 10 ஏக்கர் பரப்பளவில் பழங்காலப் பானையோடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பகுதி அண்மையில் தமிழக அரசு அகழாய்வு மேற்கொண்ட மயிலாடும்பாறை பகுதியை போன்று உள்ளது. இங்கும் மேற்பரப்பில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள், உடைந்த கற்கால கைக்கோடரிகள், கருப்பு சிவப்பு பானையோடுகள், இரும்பு கழிவுகள், பாறை ஓவியங்கள், சங்ககாலத்தைச் சேர்ந்த செங்கற்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

கல்வெட்டு

கிணற்றின் ஒரு பக்க கால்வாய் முழுவதும் ஏறக்குறைய 2,000 ஆண்டு பழங்கால செங்கற்களை கொண்டு தற்போது கட்டப்பட்டுள்ளது. அதே போல நிலத்தின் அடியிலும் இந்த செங்கற்கள் வரிசையாக இருப்பதாக ஊர் மக்கள் கூறினர். இதன் மூலம் அந்த இடம் சங்ககால மக்களின் வாழ்விடமாக இருக்கக்கூடும் என்பது தெரிகிறது. ஏற்கனவே குட்டூர், அங்குசகிரி ஆகிய இடங்களில் சங்ககால செங்கற்கள் கிடைத்துள்ளன.

மேலும் சென்னானூரை சுற்றி உள்ள பகுதிகளில் 8, 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்தோடு கூடிய நடுகற்கள், 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டும் கிடைத்துள்ளன. எனவே சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் மனிதர்கள் வாழ தொடங்கி இருக்கிறார்கள். அதற்கான தொல்லியல் சான்றுகள் தொடர்ச்சியாக கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், பிரகாஷ், வரலாற்று ஆய்வுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story