தென்பெண்ணை ஆற்று படுகையில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு
புதுப்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்று படுகையில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
புதுப்பேட்டை:
புதுப்பேட்டை அருகே உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் வரலாற்று துறை ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது சோழர்கால செப்பு நாணயம் ஒன்றை கண்டறிந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தென்பெண்ணையாற்று படுகையில் கண்டெடுத்த வட்ட வடிவ செப்பு நாணயத்தை சுத்தம் செய்து ஆய்வு செய்ததில் நாணயத்தின் ஒருபக்கத்தில் தேவநாகரி எழுத்தில் "ஸ்ரீராஜராஜ" என பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. ஆகவே 985 முதல் 1,014 வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் காலத்திய நாணயம் என தெரியவந்துள்ளது. இந்த நாணயத்தில் மலரை கையில் ஏந்தியவாரு ஒருவர் நிற்க, அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. நாணயத்தின் மறுபக்கம் கையில் ஒருவர் சங்கு ஏந்தி அமர்ந்திருக்கிறார். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில்" ஸ்ரீராஜ ராஜ" என எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சங்க கால மன்னர்கள் மற்றும் அதன் பின் அரசாண்ட சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் தாமிரபரணி, வைகை, காவிரி போன்ற ஆற்றுப்படுகையில் ஆய்வாளர்களால் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகிறது. பண்ருட்டி பகுதி தென்பெண்ணையாற்று படுகையில் முதன் முதலாக தற்போது தான் சோழர்கால செப்பு நாணயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.