காடவராயர் மலைக்கோட்டை கண்டுபிடிப்பு


காடவராயர் மலைக்கோட்டை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே காடவராயர் மலைக்கோட்டை கண்டுபிடிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

செஞ்சி தாலுகா கெங்கவரம் என்னும் ஊர் கங்கைகொண்ட சோழபுரம் என்று வழங்கி பின்னர் கங்கைபுரம் என்றாகி தற்போது பேச்சு வழக்கில் கெங்கவரம் என்று மறுவியிருத்தல் வேண்டும். இவ்வூரில் சுமார் 1,500 அடி உயரம் கொண்ட மலைமேல் துருவன்கோட்டை என்று அழைக்கப்படும் மலைக்கோட்டை அமைந்துள்ளது.

இவ்வூரை சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளது. இம்மலைகளில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளன. இம்மலையின் அடிவாரத்தில் கெங்கவரம், கணக்கன்குப்பம், தேவதானம்பேட்டை, பழவலம் போன்ற பல ஊர்கள் அமைந்துள்ளன. கெங்கவரத்தை சேர்ந்த மாணவர் மதன் கொடுத்த தகவலின்படி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் களஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு 5 கல்வெட்டுகள், மலைக்கோட்டையில் இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

காடவராயர் மலைக்கோட்டை

இக்கோட்டை துருவன்கோட்டை என்று இவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது. துருகம் என்பது மராத்தியில் கோட்டை என்று பெயர். இக்கோட்டையின் பிரதான வாயில் கிழக்கே அமைந்துள்ளது. இவ்வாயிலின் மேற்பகுதியில் மட்டும் படிக்கட்டுகள் உள்ளன. மற்ற இடங்கள் சிதைந்துள்ளன. இக்கோட்டையின் தென்மேற்காக வெளியேறிச் செல்வதற்கு வசதியாக கீழ்நோக்கிய படிக்கட்டு வழி ஒன்றும் உள்ளது. மற்ற இடங்களில் மதிகல் சுவர்கள் சுற்றிலும் பாதுகாப்பு அரணாக காணப்படுகின்றன. கோட்டை வளாகத்தில் பல இடங்களில் கட்டிட பகுதியிலிருந்து இடிந்துள்ளன. இவை செங்கல், மண், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது. இங்கு கூரை ஓடுகள், செங்கற்கள் மிகுதியாக உடைந்து கிடக்கின்றன. பல சிறிய அறைகள் இருந்த தடயங்கள் உள்ளன. கோட்டைப்பகுதியின் வடமேற்கு மூலையில் எண்ணெய் கிணறு ஒன்று வவ்வால் நெற்றி மண்டபம்போன்று அமைந்துள்ளது. இதன் உள்ளே தரைப்பகுதியில் 2 சதுர வடிவ துவாரங்கள் உள்ளன. இது எண்ணெய் சேமிக்கும் கிணறாகும்.

இம்மலையின் நடுப்பகுதியில் பெரிய இயற்கையான, பள்ளமான பகுதி உள்ளது. இதன் கரையில் உள்ள கல்வெட்டு அவனி ஆளப்பிறந்தான் ஏரி என்று இந்த நீர்நிலையை குறிப்பிடுகிறது. அவனி ஆளப்பிறந்தான் என்பது காடவராய மன்னன் கோப்பெரும் சிங்கனை குறிக்கும். மேலும் கச்சிபெருமாள், மன்னர், மக்கள், நாயகன் போன்ற பெயர்களில் சுணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பாறையில் சிறிய அளவில் சிவலிங்கம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 உரல் குழிகளும் உள்ளன. இவையெல்லாம் 13-ம் நூற்றாண்டில் சோழ பேரரசின் கீழ் சிற்றரசனாக இந்த நடுநாட்டில் ஆட்சிப்புரிந்த காடவராயர்களின் மலைக்கோட்டை என்பது தெளிவாகிறது. இவர்கள் தொடக்கத்தில் கூடலூரை (கடலூர்) தலைமையிடமாக கொண்டு ஆட்சிப்புரிந்து பின்னர் உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்தனர். இவர்கள் தங்களை பல்லவர்களின் வழி தோன்றல்கள் என்று கூறிக்கொள்கின்றனர். காடவராயருக்கு பிறகு இக்கோட்டை விஜயநகர நாயக்கர் காலத்தில் பயன்பாட்டில் இருந்து பின்னர் அழிந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இக்கோட்டையை அரசு பாதுகாக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் கருத்தாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story