முற்கால பாண்டியர்களின் நவகண்ட சிற்பம் கண்டுபிடிப்பு
திருச்சுழியில் முற்கால பாண்டியர்களின் நவகண்ட சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை,
திருச்சுழியில் முற்கால பாண்டியர்களின் நவகண்ட சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பலி கொடுக்கும் வழக்கம்
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் விஜயராகவன், ராஜபாண்டி ஆகியோர் திருச்சுழியில் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருச்சுழி பூமிநாதன் கோவிலுக்கு வடக்குப்புறம் ஊர்க்காவலன் தெருவில் 1 அடி அகலமும், 1½ அடி உயரமும் கொண்ட கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் விஜயராகவன் கூறியதாவது:-
முற்காலத்தில் அரசர்கள் தமது பகைவர்களோடு போர் தொடுக்க படையெடுத்து செல்லும்போது தன்னுடைய மன்னனின் வெற்றிக்காக அந்நாட்டு படை வீரர்களில் ஒருவன் தன் தலையை தானே அறுத்து தன்னுயிரை பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.
கருப்பசாமி
இதுபோன்ற உயிர் துறத்தலை 'அபி பலி' என தொல்காப்பியம் கூறுகிறது. இச்செய்திகள் சங்க இலக்கியங்களான மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. சங்கஇலக்கிய காலம் தொட்டு 'அபி பலி' போன்ற மரபு காணப்பெற்றாலும், 9-ம் நூற்றாண்டு முதல் 13 -ம் நூற்றாண்டு வரை இம்மரபு உச்சம் பெற்றது எனலாம். திருச்சுழியில் கண்டறியப்பட்ட நவகண்ட சிலையானது தலைமுடி கொண்டையாகவும், காதுகளில் காதணி அணிந்த நிலையிலும், முகம் மலுங்கிய நிலையில் தன்னுடைய வலது கையால் தனது கழுத்தில் வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக கத்தியைக்கொண்டு குத்தியபடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இச்சிற்பத்தை அங்கு வசிக்கின்ற மக்கள் கருப்பசாமியாக வழிபட்டு வருகின்றனர்.
சிறப்பு வாய்ந்த சிற்பம்
விருதுநகர் மாவட்டத்தில் நவகண்ட சிற்பங்கள் 2 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது 3-வது திருச்சுழியில் கண்டறியப்பட்ட நவகண்ட சிற்பமானது கி.பி. 10-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த முற்கால பாண்டியர்கள் காலத்தினை சார்ந்தது என்பதனால் மிகச்சிறப்பு வாய்ந்த சிற்பமாக இச்சிற்பம் கருதப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.