நாயக்கர் கால புலிக்குத்தி பட்டான் கல் கண்டெடுப்பு
பேரணாம்பட்டு அருகே நாயக்கர் கால புலிக்குத்தி பட்டான் கல் கண்டெடுக்கப்பட்டது.
புலிகுத்தி பட்டான் கல்
பேரணாம்பட்டு அருகே உள்ள பக்காலப்பல்லி கிராமத்தில் குடியாத்தம் திருமகள் ஆலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ஜெயவேல் தலைமையில் வரலாற்று துறை மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலையின் வலது புற கரை அருகில் புலிக்குத்தி பட்டான் கல் ஒன்று இருப்பதை கண்டறிந்தனர்.
இது குறித்து பேராசிரியர் ஜெயவேல் கூறியதாவது:-
இந்த புடைப்பு சிற்பமானது சுமார் 400 ஆண்டு களுக்கு முன்பு விஜயநகர பேரரசின் கீழ் நாய்க்கர் கால குறுநில மன்னர்கள் ஆட்சி காலத்தில் சுமார் 5 அடி உயரமும், 3 அடி உயரமுள்ள புடைப்பு சிற்பமான புலிக் குத்தி பட்டான் கல் என்றும், பண்டைய காலத்தில் மலையோர பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தாங்கள் வேளாண்மை செய்வதற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பிற்காகவும் கால்நடைகளை வளர்த்து வந்துள்ளனர்.
தத்ரூபமாக
கால்நடைகளை பாதுகாப்பதற்காக வேட்டையாட வரும் புலி போன்ற விலங்குகளுடன் போராடி இந்த போராட்டத்தில் வீரர்களோ அல்லது விலங்கினமோ இறப்பதுண்டு, இந்த புடைப்பு சிற்பத்தில் மிக தீர்க்கமாக வாளேந்தி போரிடும் காட்சியை தத்ரூபமாக வடிவமைத்துள்ளதை காணமுடிகிறது. இந்த போரின் இறுதியில் வீரன் இறந்திருக்கலாம், அவற்றை விளக்கும் விதமாக அந்த புடைப்பு சிற்பத்தில் இடது புறமாக வீர மரணமடைந்ததை எண்ணி அவனது மனைவி சிவலோத்திற்கு வாழ்த்தி அனுப்புவது போன்றும், வலது புறத்தில் சிவலோகத்திற்கு சென்று வீரன் அருள் பெறுவது போன்றும் மிக நேர்த்தியாக இந்த புடைப்பு சிற்பம் காணப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.