திருமங்கலம் அருகே அரவை தொழில்நுட்பத்ைத வெளிப்படுத்தும் கற்கால கருவி அமைப்புகள் கண்டெடுப்பு
திருமங்கலம் அருகே மலையில் புதிய கற்கால அமைப்புகளை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பேரையூர்
திருமங்கலம் அருகே மலையில் புதிய கற்கால அமைப்புகளை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புதிய கற்கால கருவிகள்
மதுரை, திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப்பகுதியில் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, புதிய கற்காலத்தின் அரவைத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும், பாறையில் உருவாக்கப்பட்ட அமைப்பினை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது குறித்த தகவல், நூர்சாகிபுரம் சிவகுமார் மூலம் தெரியவந்ததை தொடர்ந்து, ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப்பாதுகாப்பு மன்ற மாணவர்கள் மனோஜ், பிரவீனா ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வு குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-
புதிய அகழாய்வுகள் மூலம் தமிழ்நாட்டில் புதிய கற்காலம் கி.மு.6000 முதல் கி.மு.2200 வரையிலானது என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோபால்சாமி மலையின் வடக்குப்பகுதியில் கல்லாலான வட்டச்சில்லு, அரைப்புக்கற்கள், சிவப்பு நிற பானை ஓடுகள், புதிய கற்கால கோடரி, இரும்பு கசடுகள் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இங்குள்ள பாறைகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வழுவழுப்பாக தேய்த்த சிறிய மற்றும் பெரிய பள்ளங்கள், அம்மி போன்ற அமைப்பும் உள்ளன. இவை அரைப்பு கற்களை கொண்டு தானியங்களை இடிக்கவும், அரைக்கவும், கொட்டைகளை உடைக்கவும் பயன்படுத்திய இடங்களாக இருக்கலாம் என தெரிகிறது.
திருைகக்கல்
கற்கால கருவிகளை தேய்த்தபோது உண்டான பள்ளங்கள் போல தெரியவில்லை. அவை நீளமானதாக இருக்கும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் தேய்க்குமிடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகள் அருகிலேயே உள்ளன. இங்கு ஆறு, சுனை எதுவுமில்லை. புதிய கற்காலத்தில் மனிதனிடம் ஏற்பட்ட முக்கியமான நாகரிக வளர்ச்சி தானியங்களை இடித்து, அரைத்துப் பயன்படுத்தியதும், சமைத்த உணவுகளை உண்ணத் தொடங்கியதும்தான்.
இது மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றி பல் உள்ளிட்ட உடல் பிரச்சினைகளுக்குக் காரணமானது. பையம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் கற்காலத்தில் பயன்பாட்டில் இருந்த அரைப்புக்கல், திருகைக்கல், குழவி போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அகழாய்வு வேண்டும்
இங்குள்ள ஒரு பாறையில் ஒரு வரிசைக்கு 6 என 3 வரிசைகளில் அமைந்த 18 குழிகள் கொண்ட பல்லாங்குழி அமைப்பும், அதன் அருகில் சதுர வடிவில் அமைந்த படம் போன்ற ஒரு பாறைச் செதுக்கலும் உள்ளன. தமிழ்நாட்டில் புதிய கற்கால பண்பாட்டின் தொடர்ச்சியாக இரும்புக்காலம் இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக பாறையின் வடக்கில் 1 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சில பலகைக்கற்கள், தனித்தனியாகக் காணப்படுகின்றன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த சேதமடைந்த கல் திட்டையின் எஞ்சிய கற்கள் ஆகும்.
இப்பகுதியில் புதிய கற்கால, இரும்புக்காலத் தடயங்கள் உள்ளன. தென் தமிழகத்தில், புதிய கற்கால தடயங்கள் அதிகம் கிடைக்காத நிலையில் இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் டி.கல்லுப்பட்டியில் இந்த தடயங்களை மத்திய தொல்லியல் துறை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளது. மதுரை முத்துப்பட்டி பெருமாள்மலையில் உள்ள பாறையிலும் இதுபோன்ற அரைப்புப் பள்ளங்கள் உள்ளன. இந்த இடங்களில் அகழாய்வு செய்து தென் தமிழ்நாட்டில் நிலவிய புதிய கற்காலப் பண்பாட்டை அரசு வெளிக்கொணர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.