சுரங்க அறையில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு


சுரங்க அறையில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கைலாசநாதர் கோவில் சுரங்க அறையில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

விழுப்புரம்

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் கல்வெட்டுகள் குறித்து களஆய்வு மேற்கொண்டனர். இதில் இதுவரை கோவிலில் 3 கல்வெட்டுகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் விழுப்புரம் மண்டல இணை ஆணையர் சிவக்குமார், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில், புதிய கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் கோவிலில் உள்ள சுரங்க அறையில் சில கல்வெட்டுகள் இருந்ததையும் கண்டறிந்தனர். ஆனால் அந்த கல்வெட்டுகள் முழுவதும் மண் மூடி இருந்தது. இதையடுத்து அந்த மண்ணை அகற்றி பார்த்தபோது சம்புவராய மன்னன் ராசநாராயண சம்புவராயன் 12-வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, கைலாசநாதர், திருவாளீஸ்வரம் மற்றும் ஒரு கோவில் ஆகிய 3 கோவில்களுக்கு விளக்கு மற்றும் பூஜை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதையும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

மேலும் இவ்வூருக்கு ஜனநாத சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டதையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதுமட்டுமின்றி ஓரிடத்தில் ராஜராஜனின் கல்வெட்டு ஒன்றும் துண்டு துண்டாக உள்ளது. எனவே முதலாம் ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது என்பது தெளிவாகிறது.

இதற்கு அடுத்து பிற்கால பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் கல்வெட்டும் உள்ளது. இக்கல்வெட்டில் விழுப்புரம் என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கோவிலில் திருப்பள்ளி நாச்சியார் என்னும் உற்சவ திருமேனி ஐம்பொன் சிலையை பாண்டிய நாட்டு திருக்கோட்டீயூரை சேர்ந்த சுந்தரபாண்டிய காங்கேயராயன் என்பவன் செய்துகொடுத்து வழிபாட்டுக்காக நிலதானம் வழங்கியுள்ளதையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.


Next Story