ஊத்தங்கரை அருகே கி.பி. 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
ஊத்தங்கரை அருகே கி.பி. 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சவிதா தலைமையில் மாணவிகள், ராமசாமி நகர் பகுதியில் கள ஆய்வை மேற்கொண்டனர். அப்போது பாம்பாற்று கரையோரம் அமைந்துள்ள ராமசாமி நகர் பகுதியில் கி.பி. 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. அந்த பகுதியில் செங்கல் குவியலாக குவிக்கப்பட்டு இருந்தது. அந்த செங்கற்களை பார்க்கும்போது அது சோழர்கால செங்கற்கள் என்பது ெதரிந்தது. செங்கல் குவியலுக்கு நடுவே ஒரு சிற்பம் காணப்படுகிறது. மேலும் அங்குள்ள ராமலிங்கேஸ்வர் கோவில் அருகே கல்வெட்டு ஒன்று பாதி உடைந்த நிலையில் கண்ெடடுக்கப்பட்டது. அதில் ஒரு புறம் சூலமும் சூலத்தின் மேற்பகுதியில் சூரியன் மற்றும் சந்திரனின் சிற்பமும் காணப்படுகிறது. மேலும் அதில் பழமையான தமிழ் எழுத்துக்களால் எழுதியுள்ளனர். இந்த கல்வெட்டு சூலக்கரை நாயனார் வெள்ளர் வீர விடங்கர் என்பவருக்கு நிலத்தை தானமாக வழங்கிய செய்தியை கூறும் கல்வெட்டாக இருக்கலாம் என தோன்றுகிறது. ஊத்தங்கரைக்கு அருகாமையில் கல்லாவி செல்லும் வழியில் சூளகரை என்ற ஊர் உள்ளது. அங்கும் பழமையான சோழர்கால சிவன் கோவில் ஒன்று உள்ளது. அதனோடு கல்வெட்டு செய்தி ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.