படைத்தளபதி, போர்வீரர் ஆனிரை நடுகற்கள் கண்டெடுப்பு


படைத்தளபதி, போர்வீரர் ஆனிரை நடுகற்கள் கண்டெடுப்பு
x

பேரணாம்பட்டு அருகே போரில் வீரமரணமடைந்த படைத்தளபதி மற்றும் போர் வீரனின் ஆனிரை நடுகற்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

வேலூர்

நடு கற்கள்

பேரணாம்பட்டு அருகே உள்ள செண்டத்தூர் ஊராட்சி கிருஷ்ணம் பல்லி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு அருகில் நடு கற்கள் இருப்பதையறிந்த குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ஜெயவேல் மற்றும் வரலாற்று பிரிவு மாணவர்கள் சந்துரு, கோகுல், சதீஷ் பாரதி, சக்திவேல் ஆகியோர் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து ஜெயவேல் கூறியதாவது:-

இந்த களஆய்வில் 2 ஆனிரை நடு கற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 9 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட ஒரு ஆனிரை மீட்பு நடுகல், மற்றொன்று 5 அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்டுள்ளது.

வீர மரணம்

பல்லவர் காலத்தில் தொண்டை மண்டலமானது 24 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது. பல்லவர்களை வீழ்த்திய சோழர்கள் தொண்டை மண்டலத்தை கைப்பற்றி ஜெயங்கொண்ட சோழபுரம் என பெயர் மாற்றி பிற்காலங்களில் அக்கோட்டங்களை வளநாடுகள் என்று அழைத்தனர். இந்த 24 கோட்டங்களில் படுவூர் கோட்டமும் ஒன்றாகும்.

அப்போதைய படுவூர் கோட்டத்திற்கு உட்பட்டது செண்டத்தூர். ஆனி ரை மீட்பு நடுக்கல் 8 வரிகள் கொண்ட வாசகத்தில் சக ஆண்டு 932 என்று கூறுவதுடன் படுவூர் கோட்டத்தில் அடையாறு நாட்டின் ஸ்ரீமாவிலி வானவராயர் ஆட்சிக் காலத்தில் மறைமங்கலத்திலிருந்து, போர்ப்படை தளபதி தண்டிக்காமானார் என்பவர் இண்டத்தூரில் எருமைகளை கவர்ந்து செல்ல வந்த போது நடைபெற்ற போரில் உடலில் 8 அம்புகள் தைத்து வீர மரணம் அடைந்த செண்டத்தூரின் வீரனுக்காக எழுப்பப்பட்ட ஆனி ரை மீட்பு நடுகல் என்று கூறுகிறது.

போர் வீரன்

இந்த நடு கல்லில் போர் வீரன் வலது கையில் வாளேந்தியும், இடது கையில் வில்லேந்தியும், இடுப்பில் உடை உரையில் குத்து வாளுடன் 8 அம்புகள் உடலை தைத்தவாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர். இதன் அருகே மற்றொரு நடு கல்லானது 5 அடி உயரமும், 2,½ அடி அகலமும் கொண்ட நினைவு கல்லில் நான்கு வரி வாசகங்கள் சரிவர கண்டறிய முடியாத நிலையில் காணப்படுவதாகவும், அம்புகள் உடலில் தைத்த நிலையில் வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் வில்லேந்தியவாறு நிற்கும் காட்சி தத்ரூபமாக காணப்படுகிறது. இந்த 2 ஆனிரை நடு கற்களில் ஒருவர் படை தளபதியாகவும், மற்றொருவர் போர் வீரராக இருந்துள்ளனர். செண்டத்தூரில் எருமைகள் கூட்டத்தை கவர்ந்து சென்று தன் நாட்டில் வளமைப்படுத்தி கொள்வதற்காக இது ஒரு வீர போராக கருதப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story