விஜயநகர கால நடுகற்கள் கண்டெடுப்பு


விஜயநகர கால நடுகற்கள் கண்டெடுப்பு
x

ஏலகிரி மலையில் விஜயநகர கால நடுகற்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

திருப்பத்தூர்

நடுகற்கள்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, ஆங்கிலத்துறை பேராசிரியர் வ.மதன் குமார், காணிநிலம் மு.முனிசாமி, திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் பல்லவன் ஆகியோர் ஏலகிரி மலையில் மேற்கொண்ட கள ஆய்வில் இரு நடுகற்களை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியதாவது:-

ஏலகிரிமலை சுற்றுலாத் தலத்திற்கு மட்டுமின்றி வரலாற்று சிறப்புக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. கற்கோடாரிகள், கற்திட்டைகள், பல்லவர் காலம் முதல் விஜய நகர காலம் வரையிலான நடுகற்கள், கல்வெட்டுகள் என தொடர்ச்சியாக எங்கள் ஆய்வுக் குழுவினரால் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

விஜயநகர காலம்

அந்த வகையில் ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங்களில் ஒன்றான மேட்டுக்கனியூர் என்னும் ஊரில் புதிதாக கூத்தாண்டவர் (அரவான்) கோவில் ஒன்றை அவ்வூர் மக்கள் கட்டி வருகின்றனர். அந்த கோவிலுக்கு இடதுபுறத்தில் சிறு கோவில் ஒன்றை கட்டி அதில் நடுகல் தெய்வத்தை வழிபட்டு வருகின்றனா்.

இந்த தெய்வம் விஜய நகர காலத்தில் ஏற்பட்ட போரில் வீர மரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடுகற்கள் ஆகும். இவை ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்களாகும். இந்த நடுகற்களின் அமைப்பானது பிரமாண்டமான பலகைக்கல் ஒன்றில் வடிவமைக்கப ்பட்டுள்ளது .4 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட அக்கல்லில் சரிபாதியாக இரண்டு வீரர்களின் உருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தெய்வமாக

முதல் உடலின் உருவமானது வலது கையில் பெரிய வில்லையும், இடது கையில் அம்பையும் பிடித்துள்ள கோலத்தில் உள்ளது. அலங்கரிக்கப்பட்ட கொண்டை, மார்பில் அணிகலன்கள், இடையில் குறுவாளுடன் கூடிய அழகிய ஆடை வடிவமைப்பு உள்ளது. இரண்டாவது நடுகல்லும் வலது கையில் வில், இடது கையில் அம்பு, அலங்கரிக்கப்பட்ட கொண்டை, இடையாடையில் குறுவாள் என வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நடுகல் வீரர்கள் இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் தாங்கி இருப்பர். இந்த நடுகற்கள் சற்று வித்தியாசமாக வலது கையில் வில்லும், இடது கையில் அம்பினையும் வைத்துள்ளன. ஒரே போர்க்களத்தில் தம் ஊரைக் காக்க நடந்த போரில் உயிர் விட்ட வீர மறவர்களை தெய்வங்களாக ஏலகிரிமலை மக்கள் வழிபடுவது சிறப்புக்குரியது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story