குளச்சலில் வீடுகளில் கழிவுநீர் குழாய்களை அடைப்பதில் பாரபட்சம்; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டு


குளச்சலில் வீடுகளில் கழிவுநீர் குழாய்களை அடைப்பதில் பாரபட்சம்; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் வீடுகளில் கழிவுநீர் குழாய்களை அடைப்பதில் பாரபட்சம் காட்டுவதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சலில் வீடுகளில் கழிவுநீர் குழாய்களை அடைப்பதில் பாரபட்சம் காட்டுவதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.

நகராட்சி கூட்டம்

குளச்சல் நகராட்சி கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், நகராட்சி மேலாளர் சக்திகுமார், பொறியாளர் மணி, நகரமைப்பு ஆய்வாளர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களின் விவரம் வருமாறு:-

ஷெர்லி பிளாரன்ஸ் (தி.மு.க.):- எனது வார்டு பகுதியில் தகன மேடை அமைக்க கூடாது.

தலைவர்:- தகன மேடையால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அது இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்திற்குள்தான் அமையும்.

ஷெர்லி பிளாரன்ஸ்:- வேறு இடத்தில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு தகன மேடை அமையுங்கள்.

லாரன்ஸ் (தி.மு.க.):- எனது வார்டில் உடைந்த சிலாப்புக்களை சீரமைக்க கூறி பல நாட்கள் ஆகிவிட்டது.

தலைவர்:- உடைந்த சிலாப்புகளை சீரமைக்க சொல்கிறேன்.

கழிவுநீர் குழாய்கள் அடைப்பு

ஷீலா ஜெயந்தி (தி.மு.க.):- எனது வார்டில் 17 வீடுகளில் கழிவு நீர் குழாய்கள் அடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வார்டு கவன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

ரகீம் (தி.மு.க.):- வீடுகளில் கழிவு நீர் குழாய் அடைக்க அரசு ஆணை உள்ளதா?

தலைவர்:- இது கலெக்டர் நடவடிக்கை

ரமேஷ் (காங்கிரஸ்):- வீடுகளில் கழிவு நீர் குழாய் அடைப்பதில் நகராட்சி ஊழியர்கள் பாரபட்சம் காட்டுகின்றனர்.

வாக்குவாதம்

தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தை நிறுத்தாததால் தலைவர் எழுந்து வெளியே சென்றார். பின்னர் அனைவரும் மன்ற கூடத்தை விட்டு வெளியேறினர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story