வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்:அரசு செயல்படுத்தும் திட்டங்கள் விரைவில் பொதுமக்களை சென்றடைய வேண்டும்-கலெக்டர் அரவிந்த் பேச்சு
நாகர்கோவில்,
அரசு செயல்படுத்தும் திட்டங்கள் விரைவில் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
பயிற்சி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி மேலாளர்களுக்கு குமரி மாவட்டத்தில் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலமாக 5 நாள் பயிற்சி நடந்தது. இதில் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்குவது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்பாடுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வங்கிகளுக்கிடையேயான தொடர்பு, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகள் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் செயல்பாடுகள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.
கலந்துரையாடல்
பயிற்சி நிறைவையொட்டி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் கலந்துரையாடல் நடந்தது.
இதில் கலந்து கொண்ட கலெக்டர் அரவிந்த், அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவர் பேசும் போது, 'அனைவரும் கிராமப்புறங்களில் பெற்ற பயிற்சிகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் விரைவாக பொதுமக்களை சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.
இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் குமரி மாவட்ட முதன்மை மண்டல மேலாளர் பா.சத்தியநாராயணன் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்துவம் குறித்தும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களை கிராமப்புற கிளைகளில் பணிபுரியும் போது விவசாயிகளுக்கு எடுத்துரைப்பதற்கும் அறிவுரை கூறினார்.
இதில் குமரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எல். பிரவீன் குமார், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ஆன்றோ ஜவஹர் கலந்துகொண்டார். முடிவில் வங்கி அதிகாரி ஹட்சன் இம்மானுவேல் நன்றி கூறினார்.