பிரதமருடன் கலந்துரையாடல்: 'தேர்வும், தெளிவும்' நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு


பிரதமருடன் கலந்துரையாடல்: தேர்வும், தெளிவும் நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
x

பிரதமருடன் கலந்துரையாடும் வகையிலான ‘தேர்வும், தெளிவும்' நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

மாணவர்கள் பயமின்றி தேர்வை எதிர்கொண்டு மிகப்பெரிய வெற்றி பெறும் வகையில் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் பிரதமருடன் மாணவர்கள் கலந்துரையாடும் வகையிலான 'தேர்வும் தெளிவும்' என்ற நிகழ்ச்சியை வருகிற 27-ந்தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் நடத்துகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசும் உரையை நேரலையில் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் காணலாம். இதுதவிர, வருகிற 20-ந்தேதிக்குள் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நாடு தழுவிய ஓவிய போட்டியும் நடைபெற இருக்கிறது.

'தேர்வும், தெளிவும்' நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் innovateindia.mygov.in என்ற இணையதளத்துக்கு சென்று 'பரிக்ஷா பே சர்ச்சா' (தேர்வு பற்றிய விவாதம்) என்ற நிகழ்ச்சி பகுதிக்கு சென்று தங்கள் விவரங்களை பதிவிடலாம். இதன்மூலம் பிரதமருடன் உரையாட, அவர் மாணவர்களுக்கு வழங்கும் செய்தியை கேட்பதற்கான, பார்ப்பதற்கான வாய்ப்பை பெறலாம்.

புத்தகம் வெளியீடு

இந்தநிலையில் மதுரையில் தேர்வும், தெளிவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்காக எழுதிய 'பரீட்சைக்கு பயமேன்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதியை தேர்வும், தெளிவும் நிகழ்ச்சியின் தமிழக பொறுப்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும்போது, "அரசியல் கலப்பின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில், பிரதமருடன் தமிழக மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், சமூக நல அமைப்புகளோடு இணைந்து, மாணவர்களுக்கான பிரதமர் நிகழ்ச்சியை அனைவரும் சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டும்'', என்று வலியுறுத்தினார்.


Next Story