பருத்தி பயிரில் நோய் தாக்குதல்
திருவேங்கடம் பகுதியில் பருத்தி பயிரில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பகுதி வானம் பார்த்த கரிசல் பூமி ஆகும். இங்கு பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லை. விவசாயத்தை நம்பி வாழும் கிராமப்புற பகுதிகளை கொண்ட வட்டாரம் ஆகும். வரகனூர், கரிசல்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, மகாதேவர்பட்டி, குருவிகுளம், குறிஞ்சாக்குளம், அழகனேரி, நாலுவாசன்கோட்டை, வெள்ளாகுளம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் விவசாயிகள் அதிகளவில் பயிரிடுவது பருத்தி பயிராகும். அதற்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு வட மாநிலங்களில் பருத்தி விளைச்சல் குறைவாக இருந்ததால் பருத்தி பயிருக்கு நல்ல விலை இருந்தது. இதனால் இந்த ஆண்டு ஏராளமான விவசாயிகள் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர். ஆனால் பருவமழை பெய்யாமல் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் குளங்களும் நிரம்பவில்லை. அதனால் நெல் பயிடும் வேலையை பெரும்பாலான விவசாயிகள் தொடங்கவில்லை. பருத்தி பயிரை நம்பியே பெரும்பாலான விவசாயிகள் உள்ளனர்.
இந்தநிலையில் பருத்தி செடி பூ பூத்து, காய் காய்க்கும்போது செடிகள் அப்படியே சாய்ந்து காய்ந்து விடுகின்றன. செடிகள் தானாகவே பலத்தை இழந்து கீழே விழுந்து காய்ந்து விடுகின்றன. பயிரில் ேநாய் தாக்குதல் காரணமாக இவ்வாறு பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் பருத்தியில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.