சின்ன வெங்காய சாகுபடியில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்;தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்


சின்ன வெங்காய சாகுபடியில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்;தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்
x

சின்ன வெங்காய சாகுபடியில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் ப.மரகதம் விளக்கம் அளித்து உள்ளார்.

ஈரோடு

சின்ன வெங்காய சாகுபடியில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் ப.மரகதம் விளக்கம் அளித்து உள்ளார்.

சின்ன வெங்காயம்

ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் விதைகுமிழ்கள் (விதைக்காய்கள்) மூலமே சின்ன வெங்காயம் பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வெங்காயம் சாகுபடி செய்ய நிலத்தை விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர்.

வெங்காயத்தை அடித்தாள் அழுகல் நோய், அடிச்சாம்பல் நோய், இலைக்கருகல் நோய், வேர் அழுகல் நோய், வெள்ளை அழுகல் நோய், ஊதா கொப்புள நோய் போன்ற நோய்கள் தாக்குகின்றன. எனவே பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு நோய் தாக்குதலில் இருந்து வெங்காய பயிர்களை காப்பாற்றலாம்.

தொழுஉரம்

விதைக்குமிழ்கள் திரட்சியான நோய் தாக்கமில்லாத அழுகலற்ற விதை வெங்காயமாக இருக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 2½ கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸ், 2½ கிலோ டிரைகோடெர்மாவிரிடி, 12½ கிலோ வேம், 4 கிலோ அசோபாஸ், 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை நன்கு மக்கிய 625 கிலோ தொழு உரத்துடன் கலந்து கடைசி உழவின்போது மண்ணில் இட வேண்டும்.

வெங்காய விதைகுமிழ்களை 10 கிராம் டிரைகோடெர்மா, 10 கிராம் பேசில்லஸ் என்ற அளவுள்ள கரைசலில் விதைகுமிழ்களை நனைத்து நட வேண்டும். முளைத்தவுடன் செடியின் வேர்ப்பகுதியை சுற்றிலும் காப்பர் ஆக்சிகுளோரைடு கரைசல் கொண்டு நனைக்க வேண்டும். நடவு செய்த 30-வது நாளில் 2½ கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸ் மற்றும் 2½ கிலோ டிரைக்கோ டெர்மா விரிடியை நன்கு மக்கிய 250 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடவேண்டும்.

கோழிக்கால் நோய்

வெங்காய பயிரின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் நோய் பாதித்த செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமடைந்து துவண்டு காய்ந்து விடுகிறது. அதனை கோழிக்கால் நோய் என்று விவசாயிகள் அழைக்கின்றனர். நோய் தாக்கப்பட்ட செடியின் வெங்காயம் மற்றும் வேர்கள் அழுகி காணப்படும். வெங்காய வயல்களில் நல்ல வடிகால் வசதி அமைக்கப்படவேண்டும். தகுந்த இடைவெளியில் வெங்காயம் நடவு செய்ய வேண்டும்.

தண்ணீர் மற்றும் உரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி எறிந்து விட்டு அந்த இடத்தை சுற்றிலும் காப்பர் ஆக்சிகுளோரைடு (அல்லது) காப்பர் ஹைட்ராக்சைடு கரைசலை மண்ணில் ஊற்றவேண்டும். தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ஏற்படும் பாக்டீரியல் அழுகல் நோயை கட்டுப்படுத்த லிட்டருக்கு 0.2 கிராம் ஸ்டெப்டோசைக்கிளின் மருந்துடன் காப்பர் ஆக்சிகுளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு மருந்தை கலந்து தெளிக்க வேண்டும்.

ஒட்டும் திரவம்

கோழிக்கால் நோய் மற்றும் ஊதா கொப்புள நோயை கட்டுப்படுத்த தேவையின் அடிப்படையில் மட்டுமே டெபுகோனசால் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மழை மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் அடி சாம்பல் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி ரிடோமில் அல்லது 2½ கிராம் காப்பர் ஆக்சிகுளோரைடு என்ற அளவில் 7 நாட்கள் இடைவெளியில் 2 தடவைகள் தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மில்லி டீபால் போன்ற ஒட்டும் திரவம் கலந்து தெளித்து இந்த நோயை கட்டுப்படுத்தலாம். இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ப.மரகதமணி தெரிவித்து உள்ளார்.


Next Story