தகராறில் ஈடுபட்ட 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்


தகராறில் ஈடுபட்ட 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
x

தகராறில் ஈடுபட்ட 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 25-க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளித் தலைமை ஆசிரியராக குழந்தைசாமி உள்ளார்.

கடந்த 29-ந் தேதி பள்ளியின் கால அட்டவணை தயாரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடந்தது. அப்போது வேதியியல் ஆசிரியர் சின்னமணி, இயற்பியல் ஆசிரியர் கோவிந்தசாமி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆபாச வார்த்தைகளால் இருவரும் திட்டிக்கொண்டதுடன், இருவரும் கட்டிப்புரண்டுள்ளனர்.

மற்ற ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்தி பிரித்து வைத்தனர். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமாருக்கு புகார் சென்றது. அவர் இதுகுறித்து விசாரணை நடத்தி இரு ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் கூறுகையில், கால அட்டவணை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சண்டையிட்டுக் கொண்ட சின்னமணி, கோவிந்தசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பள்ளித் தலைமை ஆசிரியர் குழந்தைசாமியிடம், இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story