நாகை மதுவிலக்கு பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்


நாகை மதுவிலக்கு பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
x

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை எதிரொலியாக நாகை மதுவிலக்கு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்தும், 17 ஏட்டுக்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை எதிரொலியாக நாகை மதுவிலக்கு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்தும், 17 ஏட்டுக்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாகை ஆஸ்பத்திரி சாலையில் நாகை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் பணியில் இருப்பவர்கள் சாராயம் கடத்துவோர் மற்றும் மதுவிற்பனை செய்வோர்களிடம் லஞ்சம் பெறுவதாக நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேலு தலைமையில் போலீசார் கடந்த 15-ந் தேதி நாகை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

பெண் இன்ஸ்பெக்டர் உள்பட

3 பேர் பணியிடை நீக்கம்

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.75 ஆயிரத்து 630-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு சரோஜினி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு சரோஜினி ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி நேற்று உத்தரவிட்டார்.

17 ஏட்டுகள் மாற்றம்

மேலும் நாகை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் மதுவிலக்கு அமல்பிரிவில் பணியாற்றிய 17 ஏட்டுகளை அதிரடியாக தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.

மதுவிலக்கு அமல்பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதும், 17 போலீஸ் ஏட்டுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதும் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story