ராமநத்தம் அருகே மின்கட்டணத்தை கையாடல் செய்த மின்ஊழியர் பணியிடைநீக்கம்
ராமநத்தம் அருகே மின்கட்டணத்தை கையாடல் செய்த மின்ஊழியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே வாகையூர் கிராம மக்கள் கடந்த சிலநாட்களுக்கு முன்பு ராமநத்தத்தில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் தங்களது மின் கட்டண தொகையை செலுத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் விஜயன் என்பவர் கணினி பழுதாகிவிட்டது என்று கூறி கட்டணத்தை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதை எழுதி கொடுத்துள்ளார். இந்தநிலையில் மின்ஊழியர்கள் வாகையூர் கிராமத்திற்கு சென்று மின் கட்டணம் செலுத்தாதவர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு மின் இணைப்பை துண்டிக்க முயன்றனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தாங்கள் ஏற்கனவே அலுவலகத்தில் மின் கட்டணத்தை கட்டியதற்கான ரசீதை காண்பித்தபோது, அவை போலி ரசீது என்பது தெரியவந்தது. இதையடுத்து உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கம் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மின்ஊழியர் விஜயன் வாகையூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் மின்கட்டணத்தை வசூலித்து, அதனை கணக்கில் வைக்காமல் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மின் ஊழியர் விஜயன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.