பாமாயில் வினியோகம் தொடர்பான அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி


பாமாயில் வினியோகம் தொடர்பான அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி
x

பொது வினியோக திட்டத்துக்கு பாமாயில் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை,

தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின்கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை சப்ளை செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடந்த ஆண்டு டிசம்பரில் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. இந்த டெண்டரை எடுத்த தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.120.25 என்ற விலை அடிப்படையில் சப்ளை செய்தன.

அதே விலையில் கூடுதலாக பாமாயில் சப்ளை செய்யக்கோரி அந்த நிறுவனங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.

விலை உயர்வு

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அந்த தனியார் நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தன. அவற்றில், ரஷியா-உக்ரைன் போரால் பாமாயில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே பழைய விலைக்கு பாமாயிலை சப்ளை செய்ய முடியாது என்று கூறியிருந்தன.

அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

அரசுக்கு பாமாயில் சப்ளை செய்யும் நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கும்போதே நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் பங்கேற்கின்றன.

தலையிட முடியாது

அந்த நிறுவனங்களுக்கு சந்தை நிலவரம் என்ன என்பது நன்றாகத் தெரியும். பாமாயில் ஏற்றுமதிக்கு கடந்த ஏப்ரல் 27-ந் தேதிதான் இந்தோனேசிய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதற்கு முன்பாக கடந்த மார்ச் 2-ந் தேதியே கூடுதலாக பாமாயில் சப்ளை செய்யும்படி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் தலையிட முடியாது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

ரத்து

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட பாமாயில் டெண்டரை ரத்து செய்யக் கோரி வேறு சில தனியார் நிறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தன. அதில், '2 லட்சம் லிட்டர் பாமாயில் சப்ளை செய்வது தொடர்பான டெண்டர் ஏப்ரல் 21-ந் தேதி முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 28-ந் தேதிதான் முடிவு செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இந்தோனேசிய அரசு பாமாயிலுக்கு தடை விதித்துள்ளதால் அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், அந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story