மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பணியிடை நீக்கம்


மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பணியிடை நீக்கம்
x

பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்தார்.

திருப்பத்தூர்

பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்தார்.

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். வேலைவாய்ப்பு, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 330 மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நாட்டறம்பள்ளி வட்டம், அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் எந்பவருக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் நவீன மடக்கு சக்கர நாற்காலியை வழங்கினார். அதையடுத்து கொடி நாள் வசூல் தொகை இலக்கை கடந்து வசூல் செய்த தனி தாசில்தார் (தேர்தல்) மோகனுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கத்தை கலெக்டர் வழங்கினார்.

பணியிடை நீக்கம்

அதைத் தொடர்ந்து கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நலத்துறையின் சார்பில் பெறப்பட்ட 316 மனுக்கள் நிலுவையில் உள்ளது. அதேபோல் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல மனுக்கள் நிலுவையில் உள்ளது.மேலும், தாசில்தார் அலுவலகங்களிலும் குறிப்பாக கிராம நிர்வாக அலுவலகங்களில் கையொப்பமிடால் பல மனுக்கள் உள்ளது.

இந்த வாரம் உரிய மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். அதிகாரிகள் தங்கள் துறையில் உள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வில்சன் ராஜசேகர், (வளர்ச்சி) ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story