மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை
சாலை சீரமைப்பு பணியில் மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
நாகர்கோவில்:
சாலை சீரமைப்பு பணியில் மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
கலந்தாய்வு கூட்டம்
குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
135 லிட்டர் குடிநீர்
குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் நடைபெற்று வரும் இரணியல் கூட்டுகுடிநீர் திட்டம் உள்ளிட்ட 97 பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது. குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்திட்டம் 2018-2019 -ன்கீழ் ரூ.30.94 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகளில் 82 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
குழித்துறை நகராட்சி பகுதியில் வசிக்கும் 6,755 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை 2,655 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது குழித்துறை நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நபருக்கு 96 லிட்டர் வீதம் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடையும் போது ஒரு நபருக்கு 135 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீதம் தினந்தோறும் வழங்க இயலும்.
நடவடிக்கை
குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அஞ்சுகிராமம் மற்றும் புளியடி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் காலியாக உள்ள வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதோடு, புதுக்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு, முடியும் தருவாயில் உள்ள குடியிருப்புகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கன்னியாகுமரி- களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகளில் மெத்தனமாக இருக்கும் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் விஜயலெட்சுமி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வீட்டு வசதி வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.