சிவாஜி கணேசன் மகள்கள் மனுக்கள் தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு
சாந்தி தியேட்டரை விற்பனை நடவடிக்கைக்கு தடை கேட்டு நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துகளில் பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான ராம்குமார், நடிகர் பிரபு ஆகியோர் ஏமாற்றி விட்டனர். எனவே குடும்ப சொத்துகளை தங்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும், சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதால், பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை, சாந்தி தியேட்டர் உள்ளிட்ட சொத்துகளின் விற்பனை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சாந்தி, ராஜ்வி ஆகியோர் சார்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யபட்டன.
தடை மனு
இந்த கூடுதல் மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது, "அனைத்து சொத்துக்களிலும் மனுதாரர்கள் இருவருக்கும் சமபங்கு உள்ளது. சாந்தி தியேட்டர் பங்கு மற்றும் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அக்ஷயா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஈடுபடுவதால், அதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுதாரர்கள் வக்கீல் வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்குமார், பிரபு தரப்பில் வாதிடப்பட்டது. சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால், தடை விதிக்கக்கூடாது என்று வாதிடப்பட்டது.
தள்ளுபடி
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கூடுதல் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், சாந்தி தியேட்டர் விற்பனை நடவடிக்கைக்கு தடை கேட்டு சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.