இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு
விழுப்புரம் ரெயில் தண்டவாளம் குண்டுவெடிப்பு வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சித்ரவதை செய்ததாக இன்ஸ்பெக்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நான் சென்னை சங்கர்நகரில் உள்ள விறகு கடையில் 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி இருந்தபோது சங்கர்நகர் போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் என்னை கைது செய்தனர். என் வீட்டுக்கு அழைத்துச் சென்று டார்ச் லைட் ஒன்றை பறிமுதல் செய்தனர். பின்னர் பல்வேறு இடங்களுக்கு கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று அடித்து உதைத்தனர். தொடர்ந்து, விழுப்புரம் ரெயில்வே தண்டவாளம் வெடிகுண்டு வழக்கில் போலீசாருக்கு சாதகமாக வாக்குமூலம் அளிக்கும்படி சித்ரவதை செய்தனர்.
இதேபோல என் நண்பர் ஜேசுராஜா என்பவரையும் போலீசார் பிடித்து வைத்திருந்தனர். எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத அந்த வழக்கில் என்னை கைது செய்தனர்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
சட்டவிரோதமாக 5 நாட்கள் காவலில் வைத்து சித்ரவதை செய்த பின்னர், ஆகஸ்டு 14-ந் தேதி என்னை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். எனவே, கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். கியூ பிரிவு போலீசார் எங்கள் மீது பதிவு செய்துள்ள வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு கோரியிருந்தார்.
தண்டனை
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், ஒருவரை கைது செய்யும்போது போலீசார் பின்பற்றவேண்டிய நடவடிக்கைகள் குறித்து டி.கே.பாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை போலீசார் பின்பற்றவில்லை. அந்த உத்தரவுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என்று வாதிட்டார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன், போலீசார் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மனுதாரரை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, தன்னை போலீசார் சட்டவிரோதமாக கைது செய்து சித்ரவதை செய்தனர் என்று அவர் மாஜிஸ்திரேட்டிடம் கூறவில்லை. மனுதாரருக்கு எதிரான வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு, அவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு செய்துள்ளார் என்று வாதிட்டார்.
ஆதாரம் இல்லை
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சட்டவிரோதமாக தன்னை கைது செய்து 5 நாட்கள் சித்ரவதை செய்தனர் என்று தாம்பரம் மாஜிஸ்திரேட்டிடம் மனுதாரர் கூறவில்லை. சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டை நிரூபிக்காததால், அவருக்கு எந்த நிவாரணமும் வழங்கமுடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.