கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர் பணியிடை நீக்கம்
விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. சில டாஸ்மாக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் செய்வதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-ஐ அங்கிருந்த விற்பனையாளர் வசூலித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த விற்பனையாளரிடம் மதுப்பிரியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்பேரில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராமு, இதுகுறித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், முண்டியம்பாக்கம் டாஸ்மாக் கடை விற்பனையாளர் கணேஷ், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதன் விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு சமர்பிக்கப்பட்டது.
இதையடுத்து டாஸ்மாக் விற்பனையாளர் கணேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கையாக அவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.