பழுதான 261 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு


பழுதான 261 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 11 Aug 2023 1:45 AM IST (Updated: 11 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

சரிபார்ப்பு பணியில் கண்டறியப்பட்ட பழுதான 261 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

திண்டுக்கல்

வாக்குப்பதிவு எந்திரங்கள்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் வாக்குப்பதிவுக்கு தேவையான எந்திரங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டன. அதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா? என்று சரிபார்க்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 5 ஆயிரத்து 633 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 3 ஆயிரத்து 33 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 3 ஆயிரத்து 346 வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் எந்திரங்கள் இருந்தன. இந்த எந்திரங்கள் அனைத்தும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனி கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

261 எந்திரங்கள் பழுது

இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. பெங்களூருவில் இருந்து வந்த என்ஜினீயர்கள் தலைமையில் பணியாளர்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் எந்திரங்களை இணைத்து மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

அப்போது 125 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 51 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 85 வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் எந்திரங்கள் பழுதாகி இருந்ததை என்ஜினீயர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து 261 எந்திரங்களையும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.


Next Story