நெல் மூட்டைகள் கிடங்கிற்கு அனுப்பி வைப்பு
கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது
மணல்மேடு பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் மணல்மேடு பகுதியில் இளந்தோப்பு, வில்லியநல்லூர், மணல்மேடு, ஆத்தூர், திருவாளபுத்தூர், திருமங்கலம் போன்ற 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு மையத்திற்கு 15 ஆயிரம் நெல் மூட்டைகள் முதல் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் சில இடங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் திறந்த வெளியில் உள்ள நெல் மூட்டைகளை கிடங்கிற்கு அனுப்பி வைக்கும் பணியும், கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் நெல் மூட்டைகளை இருப்பு வைப்பதற்கும், அங்கிருந்து வெளிமாவட்டங்களில் உள்ள நெல் அரவை மில்களுக்கு அனுப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.