பொங்கல் பொருட்களுடன் வழங்க ரேஷன் கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி தீவிரம்


பொங்கல் பொருட்களுடன் வழங்க ரேஷன் கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 7 Jan 2023 2:00 AM IST (Updated: 7 Jan 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பொருட்களுடன் வழங்க ரேஷன்கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பொருட்கள், கரும்பு, ரூ.1,000 ஆகியவை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மாநிலம் முழுவதும் வருகிற 9-ந்தேதி முதல் ரேஷன்கடைகளில் அவை வழங்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 6 லட்சத்து 79 ஆயிரத்து 18 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள், கரும்பு, பணம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் ரேஷன்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க தினமும் தலா 200 முதல் 250 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 3-ந்தேதி முதல் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி பச்சரிசி, சர்க்கரை ஆகியவை ஏற்கனவே ரேஷன்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு இருக்கின்றன. இதைத் தொடர்ந்து ரேஷன்கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அதன்படி லாரிகள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,105 ரேஷன்கடைகளுக்கும் கரும்பு அனுப்பு பணி தீவிரமாக நடக்கிறது. ஒவ்வொரு ரேஷன்கடையிலும் ரேஷன்கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கரும்பு அனுப்பி வைக்கப்படுகிறது. அவை ரேஷன்கடை பணியாளர்கள் முன்னிலையில் இருப்பு வைக்கப்படுகின்றன.


Next Story