முளைப்பாரி கரைக்கும் தொட்டியில் கழிவுகள் அகற்றம்


முளைப்பாரி கரைக்கும் தொட்டியில் கழிவுகள் அகற்றம்
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விஷவாயு தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் எதிரொலியாக முளைப்பாரி தொட்டியில் இருந்த கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

விஷவாயு தாக்கி பலி

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் கோட்டைக்குளத்தின் முன்பு விநாயகர் சிலை, முளைப்பாரி கரைக்க ராட்சத தொட்டி கட்டப்பட்டு இருக்கிறது. இந்த தொட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அதன்பின்னர் தொடர்ச்சியாக முளைப்பாரி கரைக்கப்பட்டதோடு, வீடுகளில் பயன்படுத்திய பூஜை பொருட்களையும் மக்கள் கொட்டினர். இதனால் சுமார் 6 அடி ஆழத்துக்கு கழிவுகள் தேங்கி இருந்தன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல் பாறைமேடு சிதம்பரனார்தெருவை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான வெற்றிவேல் (வயது 35) என்பவரின் மகன் லிங்கேஸ்வரன் (8) முளைப்பாரி கரைக்கும் தொட்டிக்குள் விழுந்தான். அவனை காப்பாற்ற வெற்றிவேலும் தொட்டிக்குள் குதித்தார். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தொட்டிக்குள் இறங்கி 2 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதில் விஷவாயு தாக்கியதில் மயங்கி விழுந்த வெற்றிவேல் தொட்டிக்குள் மூழ்கி பலியானார். லிங்கேஸ்வரனை பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அதேநேரம் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 3 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுத்தப்படுத்தும் பணி

அதை அறிந்த கலெக்டர் விசாகன் சம்பவ இடத்துக்கு சென்று முளைப்பாரி கரைக்கும் தொட்டியை பார்வையிட்டார். மேலும் முளைப்பாரி தொட்டியில் தேங்கிய கழிவுகளை அகற்றாமல் விட்ட அதிகாரிகளை கண்டித்தார். அதோடு முளைப்பாரி தொட்டியை உடனடியாக சுத்தம் செய்யும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று மாநகராட்சி அதிகாரிகள் முளைப்பாரி தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக முதலில் மோட்டார் வைத்து தொட்டியில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்றினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தொட்டியில் இருந்த கழிவுகளை அள்ளி லாரிகளில் எடுத்து சென்றனர். அந்த கழிவுகளை அள்ளும்போது கடுமையான துர்நாற்றம் வீசியது.

பக்தர்கள் எதிர்பார்ப்பு

இந்த முளைப்பாரி கரைக்கும் தொட்டியின் அருகே பத்ரகாளியம்மன் கோவில், சிவன் கோவில், அய்யப்பன் கோவில், விநாயகர் கோவில் ஆகியவை உள்ளன. மேலும் கோட்டைக்குளத்தில் தீர்த்தம் எடுக்க பல்வேறு கோவில்களை சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். ஆனால் தொட்டியில் கழிவுகள் சேர்ந்துவிட்டால் பக்தர்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே கோவில்களுக்கு நடுவே இருக்கும் முளைப்பாரி கரைக்கும் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Related Tags :
Next Story