பஸ் டிரைவர்களுக்கிடையே தகராறு
விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பஸ் டிரைவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று ஜெயங்கொண்டத்திற்கு புறப்பட்டது. பஸ்சை மணிவண்ணன் என்பவர் ஓட்டினார். இந்த பஸ் நேற்று இரவு 8 மணியளவில் விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. பின்னர் அந்த பஸ் பயணிகளை இறக்கி ஏற்றி விட்டு, ஜெயங்கொண்டத்திற்கு புறப்பட்டபோது, விருத்தாசலம் அரசு பணிமனை 2-ல் டிரைவராக பணிபுரியும் பொன்னிவளவன், குடிபோதையில் பஸ் குறுக்கே சென்றார். இதனால், டிரைவர் மணிவண்ணன் பஸ்சை நிறுத்தினார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டி தாக்கிக்கொண்டனர். அப்போது டிரைவர் பொன்னிவளவனுக்கு ஆதரவாக விருத்தாசலம் பணிமனையை சேர்ந்த டிரைவர்கள் வந்து, ஜெயங்கொண்டம் பஸ்சை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் பஸ் நிலையத்தில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.