மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் தகராறு இருதரப்பினரிடையே மோதல்; 3 பேர் காயம் - 2 வாலிபர்கள் கைது.
பள்ளிப்பட்டு அருகே விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் உண்டான தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு 3 பேர் காயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராம மாணவர்களுக்கும், வெளியகரம் காலனி மாணவர்களுக்கும் கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக கடந்த 1-ந் தேதி வெளியகரம் கிராமத்தில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பினரும் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் இடையே சமரசம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் மாலை வெளியகரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 29) என்பவர் தனது நண்பர்கள் அஜித்குமார், வேலன், சரவணன் ஆகியோருடன் பள்ளிப்பட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது வழியில் கீழ்க்கால்பட்டடை கிராமத்தின் அருகில் உள்ள கோவில் அருகே வெளியகரம் காலனியை சேர்ந்த அமர்நாத், மைக்கில், ராகுல் மற்றும் சில நபர்கள் அவர்களை வழிமடக்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி கிரிக்கெட் மட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அஜித் குமார், வேலன், சரவணன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்களில் அஜித்குமார் வேலன் ஆகியோர் பள்ளிப்பட்டு தாலுகா அரசு ஆஸ்பத்திரியிலும், சரவணன் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சரவணன் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வெளியகரம் பழைய காலனியை சேர்ந்த அமர்நாத் (23), புதிய காலநியூ சேர்ந்த தீனா என்கிற தினேஷ் (23) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.