கோவில் விழாவில் தகராறு; அண்ணன்- தம்பி கைது
கோவில் விழாவில் தகராறில் ஈடுபட்ட அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.
திசையன்விளை:
திசையன்விளை வடக்குதெரு சுடலை ஆண்டவர் கோவில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் இரவு கோவில் முன்பு அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அன்னதானத்தின் போது திசையன்விளை வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (வயது 27) அரிவாளுடன் வந்து அங்கு போடப்பட்டு இருந்த மேஜை நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதை தட்டிக்கேட்ட கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டனின் அண்ணன் செல்வராஜ் (29) என்பவர் எனது தம்பியை சிறைக்கு அனுப்பிவிட்டு நீங்கள் இங்கு விழா கொண்டாடுவதா? என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதை தட்டிக்கேட்ட வடக்கு தெருவை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி முருகன் (41) என்பவரை செல்வராஜ் அடித்து உதைத்தார். இதில் காயம் அடைந்த முருகன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ் கைது செய்தனர்.