பட்டாசு வெடித்ததில் தகராறு: இருதரப்பை சேர்ந்த 83 பேர் மீது வழக்கு
கோவில் விழாவில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்த 83 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திசையன்விளை:
கோவில் விழாவில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்த 83 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இருதரப்பினர் மோதல்
திசையன்விளையை அடுத்த உவரி அருகே இடையன்குடி கல்லாம் பரம்பில் முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் நேற்று முன்தினம் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலமானது இடையன்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே வந்தபோது ஊர்வலத்தில் வந்தவர்களில் சிலர் பட்டாசு வெடித்தனர்.
அப்போது, அங்கு நின்ற இடையன்குடியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஜோசன் சாமுவேல் (வயது 36) என்பவர் ஊர்வலத்தில் வந்தவர்களிடம் தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து இருதரப்பினரும் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஜோசன் சாமுவேல் காயம் அடைந்தார். தொடர்ந்து சாலையில் சவுக்கு கட்டைகளை போட்டு ஒருதரப்பினர் மறியலிலும் ஈடுபட்டனர்.
83 பேர் மீது வழக்கு
இதுகுறித்து ஜோசன் சாமுவேல் மனைவி வின்சி ரெபேக்கா உவரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இடையன்குடியை சேர்ந்த நல்லமாடன், குமார், முத்துக்குமார், முருகன், வெள்ளைச்சாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் சாலைமறியல் செய்து சாலைகளில் சவுக்கு கட்டைகளை போட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக ஜோசன் சாமுவேல், சுரேந்தர், ஜெபா, ஜெகன், இம்மானுவேல், கிறிஸ்டோபர் உள்பட 77 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஒட்டுமொத்தமாக இருதரப்பை சேர்ந்த 83 ேபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.