சேலத்தில் பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு: லேத் பட்டறை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு


சேலத்தில் பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு: லேத் பட்டறை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
x

சேலத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் லேத் பட்டறை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பட்டறைக்கு முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

பட்டறை உரிமையாளர்

சேலம் பள்ளப்பட்டி கோரிக்காடு பகுதியில் சிவக்குமார் (வயது 45) என்பவர் லேத் பட்டறை வைத்துள்ளார். நேற்று காலை சிவக்குமார் மற்றும் தொழிலாளர்கள் சாரதி (20), பாஸ்கர் (20) ஆகியோர் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அங்கு 3 பேர் திடீரென மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் முகமூடி மற்றும் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர். 3 பேரும் அரிவாள் மற்றும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பட்டறை உரிமையாளர் சிவக்குமாரை சரமாரியாக வெட்டினர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் சாரதி, பாஸ்கர் ஆகியோர் அந்த கும்பலை தடுக்க முயன்றனர். அவர்களையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சிவக்குமார் உள்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

தகராறு

விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

லேத் பட்டறை உரிமையாளர் சிவக்குமார் வீட்டில் திருமலைகிரியை சேர்ந்த ஏழுமலை என்பவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் கொடுத்து போகியத்துக்கு வசித்து வந்தார். பின்னர் வீட்டை காலி செய்யுமாறு சிவக்குமார் கூறினார். அதற்கு ஏழுமலை மறுப்பு தெரிவித்து தனக்கே அந்த வீட்டை எழுதி வைக்குமாறு சிவக்குமாரிடம் வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அப்போது இருதரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தி பிரச்சினையை முடித்து வைத்தனர். இந்த தகராறு காரணமாக சிவக்குமார் மீது தாக்குதல் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

இதனிடையே லேத் பட்டறை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் உடனடியாக ஆய்வு செய்தனர். அப்போது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம கும்பல் சிவக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டும் காட்சி பதிவாகியிருந்தது. ஆனால் அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவக்குமாரை போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதனிடையே, லேத் பட்டறைக்குள் 3 பேர் புகுந்து சிவக்குமாரை அரிவாளால் வெட்டும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சேலத்தில் பட்டப்பகலில் லேத் பட்டறைக்குள் மர்ம கும்பல் புகுந்து 3 பேரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story