ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு கலைப்பு


ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு கலைப்பு
x

சொத்தை பாதுகாக்க தவறியதாக ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு கலைக்கப்பட்டது.

திருவண்ணாமலை

சொத்தை பாதுகாக்க தவறியதாக ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு கலைக்கப்பட்டது.

வீட்டுமனையாக ஒதுக்கீடு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் வேதபுரீஸ்வரர் கோவில் தெருவில் ஆரணி பட்டு கூட்டுறவு உற்பத்தியாளர் கடன் சங்கம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் முறை நிர்வாகக் குழு தலைவராக சேவூர் ஜெ.சம்பத், துணைத் தலைவராக சுந்தரமூர்த்தி மற்றும் இயக்குனர்கள் 5 பேர் இருந்தனர்.

கடந்த 2020-ம் ஆண்டு இரும்பேடு ஊராட்சியில் ஹரிஹரன் நகர் பகுதியில் உள்ள சங்கத்துக்கு சொந்தமான காலி மனையை சங்க உறுப்பினர்கள் 5 நபர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அப்போது எதிர்ப்பு எழுந்தது. அதைத்தொடர்ந்து அந்த இடத்தினை சங்க அதிகாரிகள் கம்பி வேலி அமைத்து பாதுகாத்தனர்.

நிர்வாகக்குழு கலைப்பு

அதைத்தொடர்ந்து சங்க உறுப்பினராக இருப்பதால் எங்களுக்கு வீட்டு மனை தர வேண்டும், சங்கத்தை கலைக்கக்கூடாது என உறுப்பினர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு சங்கத்தின் அசையா சொத்தை காப்பாற்ற தவறியதாக சங்க நிர்வாக குழுவை கலைக்கலாம் என பரிந்துரை செய்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இது சம்பந்தமாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத்தின் மாவட்ட மேலாண் இயக்குனர் மோகன்ராம் கடந்த 23-ந்்தேதியிட்ட ஒரு கடிதத்தினை சங்க தலைவர் சேவூர் ஜெ.சம்பத், துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் இயக்குனர்கள் 5 பேர் உள்ளிட்ட 7 நிர்வாகிகளுக்கும் அனுப்பி உள்ளார்.

அதில் சங்கத்தின் அசையா சொத்தினை காப்பாற்ற தவறிய நிர்வாக குழு கலைக்கப்படுவதாக கூறி உள்ளார். இதனால் ஆரணி நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story