தேனி ஆவின் நிர்வாகக்குழு கலைப்பு; ஓ.ராஜா உள்பட 17 பேர் பதவி பறிப்பு


தேனி ஆவின் நிர்வாகக்குழு கலைப்பு; ஓ.ராஜா உள்பட 17 பேர் பதவி பறிப்பு
x
தினத்தந்தி 5 April 2023 2:15 AM IST (Updated: 5 April 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து தேனி ஆவின் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உள்பட 17 பேரின் பதவி பறிக்கப்பட்டது.

தேனி

பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து தேனி ஆவின் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உள்பட 17 பேரின் பதவி பறிக்கப்பட்டது.

தேனி ஆவின்

தேனி மாவட்டத்தில் 400-க் கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் உள்ளன. இந்த பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால், மதுரை உள்பட பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. இதனால் மதுரை மாவட்ட ஆவின் நிர்வாகத்தில் இருந்து தேனியை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் (ஆவின்) நிர்வாக காரணங்களுக்காக கடந்த 2019-ம் ஆண்டு 2 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டது.

முறைகேடு

பின்னர் தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன் தலைவராக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்ட பின்னர், தேனி ஆவின் நிர்வாகத்தில் 38 பணியாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். இவ்வாறு பணியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், தேனி மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட 38 பணியாளர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்டவர்கள் முறைகேடாக பணியில் சேர்க்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள், தாங்கள் முறையாக தேர்வில் பங்கேற்று பணியில் சேர்ந்துள்ளதாகவும், மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

நிர்வாகக்குழு கலைப்பு

இந்த சூழ்நிலையில், தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு திடீரென கலைக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் வருகிற ஆகஸ்டு மாதம் வரை உள்ள நிலையில், நிர்வாகக்குழுவை அதிரடியாக கலைத்து பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டார். அதன்பேரில், ஓ.ராஜா உள்பட 17 பேரின் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தேனி ஆவின் செயலாட்சியராக மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story